அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் சசிகலா மீது ஆர். வைத்திலிங்கம் தாக்கு
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் அதிமுக தொகுதிக் கழகம் சார்பில் அண்ணாவின் 109-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காந்தி பூங்கா அருகில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் குழ.சுந்தர்ராஜன் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் பேசுகையில், "முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுடன் பணியாற்றிய (4 1/2) நான்கரை ஆண்டுகளில் மன நிறைவோடு பணியாற்றினேன். தஞ்சையை மாநகராட்சி ஆக்கினார். ஒரத்தநாடு கால்நடை பல்கலைக்கழகம், வேளாண் கல்லூரி, பேராவூரணி அரசு கல்லூரி, திருவோணம், திருவையாறு ஐடிஐ இப்படி பலவற்றையும் சொல்லலாம். நான் கேட்டதையெல்லாம் கொடுத்தார். அம்மா காலமான பின்னர் நடந்த நிகழ்வுகளை பார்த்து அரசியலை விட்டே விலகலாமா என்று கூட நினைத்தேன். (கண் கலங்குகிறார்). இன்றைக்கு ஒரு நல்ல சூழல் ஏற்பட்டு கூட்டுத்தலைமை ஏற்பட்டுள்ளது.
கட்சிக்கு ஆணி வேராக இருந்த தொண்டர்கள், கட்சிக்காக உழைத்த சேலம் கண்ணன், அழகு.திருநாவுக்கரசு, எஸ்.டி.சோமசுந்தரம் போன்றவர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது யார். ஆட்சியை, அதிகாரத்தை, கட்சியை கைப்பற்ற துடித்தது யார்... கட்சியை ஆட்சியை அழிக்க துடிப்பது யார். அம்மா கட்சியை விட்டு நீக்கியபோது மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு, எந்த பொறுப்புக்கும், நானோ, என்னை சார்ந்தவர்களோ வரமாட்டோம் என்று சொன்னது யார்....
அதிமுக குடும்ப சொத்தல்ல. ஒரு குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து உருவான அதிமுக, இனிமேல் ஒரு குடும்ப சொத்தாக (சசிகலா) ஆவதற்கு எந்த தொண்டனும் அனுமதிக்க மாட்டான். மரியாதை தானாக வரவேண்டும். அடித்து, அபகரிக்க நினைப்பது மோசம். அம்மா சொன்னது போல இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தும் அதிமுக நிலைத்து நிற்கும்" இவ்வாறு பேசினார்.
இக்கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் ப.கொ.அத்தியப்பன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பால் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.காந்தி, முன்னாள் மாவட்டச்செயலாளர் இரா.கார்த்திகேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், மாநில கயறு வாரியத் தலைவர் நாடாகாடு எஸ்.நீலகண்டன், பேராவூரணி ஒன்றியச்செயலாளர் உ.துரைமாணிக்கம், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் சாந்தி அசோக்குமார், நகரச்செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் எஸ்.எம்.நீலகண்டன், குழ.செ.அருள்நம்பி, எம்ஜிஆர் இளைஞர் அணி பொறுப்பாளர் மா.கோ.இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அதிமுக இரு அணிகள் இணைப்பிற்கு காரணமாக இருந்த, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கத்திற்கு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் மா.கோ.இளங்கோ தலைமையில் வீரவாள் பரிசளிக்கப்பட்டது.
-இரா.பகத்சிங்