திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வாரச் சந்தை சந்திப்பு பகுதியில் இயங்கி வரும் டீக்கடைக்கு 4 பேர் காரில் வந்து டீ குடித்துவிட்டு 50 ரூபாய்க்கு 500 ரூபாய் கொடுத்துள்ளனர். அவரும் வாங்கிக்கொண்டு மீதி சில்லறை கொடுத்தபோது, பணம் குறைவாக இருப்பதாகக் கூறி டீக்கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நபர்கள் வாரச் சந்தை பகுதிக்குச் சென்று அங்குள்ள பூண்டு கடையில் பூண்டு வாங்கிக்கொண்டு 500 ரூபாய் தாளை தந்துள்ளனர். அவர் 100 ரூபாய் எடுத்துக்கொண்டு மீதி 400 ரூபாய் தந்தபோது சில்லறை பணம் குறைவாக உள்ளதாக அங்கும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டீக்கடைக்காரர் தனது கல்லாவில் இருந்து 1500 ரூபாய் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிரச்சனை செய்தவர்கள் மீது சந்தேகம் வந்தது. அவர்களைத் தேடியபோது, சில்லறை குறைவாக இருப்பதாகச் சண்டை போடுகிறார்கள் எனத் தெரிந்து இவர்கள் திருடியிருக்கலாம் எனச் சந்தேகம் வந்து சிலரிடம் கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த சந்தையில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், காரில் வந்த 4 பேரிடம் என்ன ஊர் என விசாரிக்க அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அதில் 2 பேர் தப்பி ஓடியுள்ளனர். 2 பேரை மட்டும் பிடித்து நகர போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் நாகமலை பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் ராமு என்பதும், இவர்கள் கடைகளில் பணம் கொடுத்து சில்லறை குறைவாக உள்ளதாகக் கூறி பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது தெரியவந்தது. பின்னர் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து டீக்கடை பணியாளரிடம் ஏமாற்றிய 1500 ரூபாய் பணத்தையும் மீட்டனர். மேலும் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.