குடியிருக்கும் இடத்தை வக்ஃப்போர்டு இடம் என்று கூறுவதை கண்டித்து சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தை பள்ளிப்படை ஊராட்சிக்கு உட்பட்ட பொது மக்கள் முற்றுகையிட்டு உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை ஊராட்சியில் பூதகேணி, ஏஆர்பி நகர் உள்ளிட்ட15-க்கும் மேற்பட்ட நகர் உள்ளது. இந்த இடங்கள் அனைத்தும் வக்ஃப்போர்டுக்கு சொந்தமான என்று அறிவித்து அனைவரையும் வெளியேற்ற முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திங்கட்கிழமை காலை அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுக் குடியிருக்கும் இடம் எங்களுக்கு சொந்தமானது என்று கூறி உரிய ஆவணங்களுடன் உதவி ஆட்சியர் ஸ்வேதாசுமனிடம் தனித்தனியாக மனு அளித்தனர்.
இதுகுறித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் கூறுகையில், “நாங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் முன்பே அப்பகுதிகளில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் நாங்கள் பள்ளிப்படை ஊராட்சிக்கு உட்பட்ட இடங்கள் வக்ஃப்போர்டுக்கு சொந்தமானது எனக் கூறி வக்ஃப்போர்டு நிர்வாகம் எங்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. எங்களிடம் உள்ள பட்டா , பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம். மின் இணைப்பு எங்கள் பெயரில் வாங்கி உள்ள மின் இணைப்பு ரசீது ஆகிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.
மேலும் எங்களது மனையை விற்கச் சென்றால் சிதம்பரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அந்த இடம் வக்ஃப்போர்டுக்கு சொந்தமான இடம் என்று கூறி பத்திரப்பதிவு செய்ய மறுக்கிறார்கள். வீடு கட்ட கடன் வாங்க முடியாத நிலையில் உள்ளோம். நாங்கள் அந்த பகுதியில் இடம் வாங்கி சிதம்பரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தான் பத்திரப்பதிவு செய்துள்ளோம். இப்போது இதுபோல திடீரென கூறுவது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து எங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்துப் போராடுவோம்” என்றனர்.