நெல்லை ரெட்டியாப்பட்டியில் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலையானது சம்பந்தமாக முக்கிய நபரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த 23ந் தேதி நெல்லை ரெட்டியாப்பட்டியில் பட்டப்பகலில் நெல்லையின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வேலைக்காரப் பெண் மாரியம்மாள் உட்பட மூவர் கொடூரமாக கொல்லப்பட்டனர். கொலைக்கு யார் காரணமாக இருக்கும் என ஆரம்பக்கட்டத்தில் திக்கித் திணறிய நெல்லை காவல்துறையினர் ஏ.சி.தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பர்ணபாஸ், நாகராசன் மற்றும் பெரியசாமி தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்து கொலைக்குற்றவாளியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்தக் கொலைக்கு யார் காரணகர்த்தாவாக இருக்கமுடியுமென சந்தேகித்து, பல கேள்விகளுடன் விசாரித்து வந்த காவல்துறைக்கு 2006ம் ஆண்டு TN 07… எனும் எழுத்தைத் தொடக்கமாகக் கொண்ட ஸ்கார்பியோ கார் ஒன்று தடயமாக சிக்க, அதனின் உரிமையாளரான சைக்கோத்தனமான குற்றவாளி ஒருவன் சிக்கியுள்ளான். விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவன் முருகக் கடவுளின் பெயர் கொண்டவன் என்றும், அவன் மீது தூத்துக்குடி கயத்தாறு காவல் நிலையத்திலும், நெல்லை பணவடலி சத்திரத்திலும் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கும் உள்ளதாக தகவல் கசிகின்றது. கொலைக்குக் காரணம் கொடுக்கல் வாங்கல் விவகாரமாக இருக்கக் கூடும் என்பதாலும், அவன் ஒருவனே இதனை செய்திருக்க முடியாது என்பதாலும் விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இதனால் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர் பொதுமக்கள்.