ஆத்தூரில், 2.5 டன் கடத்தல் ரேஷன் அரிசியை மினி லாரியுடன் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து சேலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை எஸ்.பி ஸ்ரீஅபிநவ்வுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பியின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் தனிப்படையினரும், சேலம் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரும் ஆக. 9ம் தேதி இரவு ஆத்தூர் நகர பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் 2.50 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, அந்த லாரியில் வந்த நான்கு பேரைக் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், ஓமலூரைச் சேர்ந்த முரளி (27), ஆத்தூரைச் சேர்ந்த ராஜா (41), பாமக பிரமுகரான கேசவன் (45), கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களிடம் இருந்து ரேஷன் அரிசியை கிலோ 5 ரூபாய்க்கு வாங்கி, சேலம் மாநகரில் வசித்து வரும் வடமாநில கூலித்தொழிலாளர்களிடம் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தொடர் நடவடிக்கைக்காக, இந்த வழக்கை, சேலம் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் மாவட்டக் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.