Skip to main content

சேலம் சிறையில் சமையலரை கஞ்சா கடத்தி வரச் சொன்ன கைதிகள் யார் யார்? பரபரப்பு தகவல்கள்!

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Interrogation of the prison guard; Two prisoners are locked in a separate cell

 

சேலம் மத்திய சிறையில் சமையலரை கஞ்சா கடத்தி வரச் சொன்ன கைதிகள் இருவர் பிடிபட்டனர். 

 

சேலம் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தில்  புகையிலைப் பொருள்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், அலைப்பேசி உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், நீதிமன்ற விசாரணைக்குச் சென்று திரும்பும்போதோ அல்லது உறவினர்கள், காவலர்கள் மூலமாகவோ கைதிகளிடம் தடை  செய்யப்பட்ட பொருள்கள் புழக்கத்திற்கு வந்து விடுகின்றன. இதையடுத்து, அவ்வப்போது நடத்தப்படும் திடீர் சோதனைகள் மூலம் கைதிகளிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.     

 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து 7 அலைப்பேசிகள், கஞ்சா ஆகியவற்றை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றில் மூன்று அலைப்பேசிகள், கைதிகள் தங்கள் ஆசனவாயில் வைத்து பதுக்கி எடுத்து வந்திருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு சிறை சமையலர் தனபால், தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 140 கிராம் கஞ்சா கொண்டு வந்ததை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சமையலர் தனபாலை கைது செய்தனர்.

 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டார். அதேநேரம், அவரை  சிறைத்துறை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. அவரிடம் விசாரித்தபோது, தண்டனை கைதி ஒருவரும், விசாரணை கைதி ஒருவரும் கஞ்சா கடத்தி வருமாறு கூறியதாகத் தெரிவித்துள்ளார்.  தனபால் அளித்த விவரங்களின் அடிப்படையில் இந்த இரு கைதிகளும் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சமையலர் தனபாலிடம் கஞ்சா கொடுத்துவிட்டுச் செல்லும் சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இதற்கிடையே, சேலம் மாநகர வடக்கு சரக துணை ஆணையர் கவுதம் கோயல் தலைமையில், உதவி ஆணையர்கள் நிலவழகன், சரவணகுமரன், ஆய்வாளர்கள், எஸ்ஐக்கள் உள்பட 160 காவலர்கள் மத்திய சிறையில் மாலை 5.15 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் ஒரே ஒரு கஞ்சா பீடி தவிர பெரிய அளவில் தடை செய்யப்பட்ட பொருட்கள் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உதவி ஆணையர் லட்சுமி பிரியா தலைமையில் 36 பெண் காவலர்கள் சேலம் பெண்கள் கிளைச் சிறையிலும் சோதனை நடத்தினர். இந்த  சிறையில் இருந்து சர்ச்சைக்குரிய பொருள்கள் எதுவும் சிக்கவில்லை எனத் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்