Skip to main content

“ஜெபகர் அலியின் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம் வழங்குக” - ஓ.பன்னீர்செல்வம்

Published on 21/01/2025 | Edited on 21/01/2025
Provide Rs. 1 crore relief to Jepakar Ali’s family says O. Panneerselvam

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜெபகர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கணிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி ஜெபகர் அலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஜெபகர் அலி மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில், ஜெபகர் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய  போலீசார் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் சதீஷ், முருகானந்தம், காசி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதற்கிடையில்,  அதே நேரத்தில், இந்த விபத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெபகர் அலியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில், “கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராடிய திரு. ஜெபகர் அலி படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள். சட்டம்-ஒழுங்கை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இனிமேலாவது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, கனிம வளக் கொள்ளையை முற்றிலும் ஒழித்துக் கட்டவும், மேற்படி கொலைக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களை விரைந்து சட்டத்தின் முன் நிறுத்தி அதற்குரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், 

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் போராடி உயிரிழந்த ஜெபகர் அலியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்