திண்டுக்கல் மாநகர் மற்றும் கிராம பகுதிகளில், கோடை காலத்தில் சீரான முறையில் குடிநீர் வழங்க அலுவலர்களுக்கு அமைச்சர் சீனிவாசன் அறிவுரை வழங்கியுள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர் சீனிவாசனோ...
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கும் ஆத்தூர் நீர் தேக்கம் மற்றும் காவிரி குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் தாசில்தார் அலுவலகம் அருகே பிரதான குழாயில் பழுது காரணத்தினால் குடிநீர் வழங்குவதில் இடர்பாடு உள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும். ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் 4.5 அடி நீர்மட்டம் உள்ளது. இதனைக்கொண்டு ஜூன் 15 வரை நீர் வழங்க முடியும். கோடைகாலத்தில் ஊரகப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராத வகையில், ஆள்துளை கிணறு, கை பம்புகள் அமைக்கப்படும். பழுதான குழாய்கள் உடனே சரிசெய்ய வேண்டும்.
கரோனாவுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், இறைச்சிக் கடைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. மேலும், மாநகராட்சி மூலம் பந்தல் அமைத்து, கை கழுவும் தொட்டி ஏற்படுத்தப்படுத்தும் கடைகளுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று கூறினார். இந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதாரணி, பொறியாளர் பாலச்சந்திரன், செயற்பொறியாளர் ஹரிபாஸ்கர், வருவாய் அதிகாரி சாரங்கி சரவணன் உள்பட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.