மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை
மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆக. 26 - மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கருநாடக அரசின் மேகதாது அணை கட்டும் புதிய முயற்சி - ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பங்கீட்டினைத் தடுக்கும் கருநாடக அரசுக்கு, மேலும் நல்வாய்ப்பாகும் ஒரு சூழ்ச்சித் திட்டமாகும்!
கூடுதல் மின்சார உற்பத்தி என்றெல்லாம் கருநாடகத் தரப்பில் வாதிடப்பட்டாலும், மேட்டூருக்கு வரும் கொஞ்ச நஞ்ச தண்ணீரைக் கூட வரவிடாமல், தமிழ்நாட்டை முழுப் பாலைவனமாக ஆக்கி, டெல்டா விவசாயிகளை நிரந்தரப் பிச்சைக்காரர்களாக்கி, வறுமைப் படுகுழியில் தள்ளுவதற்கே பயன்படக்கூடிய பேராபாயமானதொரு திட்டமாகும்!
ஓர் ஆபத்தான மேகதாது அணைத் திட்டத்திற்கு, தற்போது தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு என்ற - மைனாரிட்டி அதிமுக அரசு சார்பில் அதன் வழக்குரைஞர் அந்த அணையை கருநாடக அரசு கட்டிக் கொள்வதற்கு ஒப்புதல் - இசைவு தெரிவித்திருப்பது, டெல்டா விவசாயிகள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியதற்குச் சமமான கொடுமையாகும்!
இப்படி ஒரு ஒப்புதலை - இவ்வளவு முக்கியப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் இன்றைய ஆட்சி எடுப்பதற்கு முன்னால்,
அ) தமிழ்நாட்டு அமைச்சரவையில் முடிவு எடுத்ததா?
அல்லது
ஆ) சட்டமன்றத்தைக் கூட்டி அதில் விவாதித்து முடிவு எடுத்ததா? அல்லது
இ) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி (அதுதான் இவர்களுக்கு ஜெயலலிதா காலத்திலிருந்து அலர்ஜி ஆயிற்றே) கருத்துக்கேட்டு, பின் இம் முடிவுக்கு வந்ததா?
அந்தப்படி எதுவுமில்லாமல், தானடித்த மூப்பாக இப்படிக் கூறியிருப்பதைவிட தமிழ்நாட்டிற்கு இந்த மைனாரிட்டி அதிமுக அரசு செய்யும் துரோகம் வேறு இருக்க முடியுமா?
அதோடு தமிழ்நாடு (மாநில) கல்வி உரிமைக்கு வேட்டு வைத்துள்ளதாகும், நீட் என்பதிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று கேட்கும் உரிமை மாநில அரசுக்கு - அரசமைப்பு சட்டப்படி உள்ள பறிக்கப்படமுடியாத (unalienable right) உரிமை ஆகும்.
அதுபற்றி டில்லிக்குப் பல முறை காவடி எடுத்து, கெஞ்சிக் கூத்தாடி, ஓராண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு என்று, மலையைக் கிள்ளி, எலியைப் பிடித்துள்ளதும் மாபெரும் வெட்கக்கேடு ஆகும்!
விலக்குக் கோரும் உரிமை மாநில அரசுக்கு உள்ள அரசமைப்புச் சட்ட கடமைகளில் ஒன்று, அதை மறுப்பதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது!
நாடாளுமன்ற நிலைக்குழு இந்த நீட் தேர்வு சட்டம் பற்றிய தனது அறிக்கையில் விலக்கு வேண்டும் மாநிலத்திற்கு அவ்வுரிமை உண்டு என்றும் பரிந்துரை இடம் பெற்றுள்ளதே! இந்நிலையில் ஏதோ பெரிய மனது வைத்து இவ்வாண்டு மட்டும் விலக்கு - இந்தளவு பல முறை தமிழக அமைச்சர்களை இழுத்தடித்த பின்புதான் என்றால் சுமார் 40 எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு இது பெருமையா? சிறுமையா?
எனவே இவ்விரண்டு முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி, வருகிற 26.8.2017 அன்று, சென்னை தொடங்கி அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் அறப்போர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாக வேண்டும்.
உடனடியாக கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆகஸ்டு - 26 அன்று நான் தஞ்சையில் காலை 11.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறேன்.
ஆங்காங்கு உடனடியாக ஏற்பாடுகளைச் செய்து தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து காட்டுவோம்!
உதாவதினி தாமதம் உடனே செயல்படு தோழா!
இவ்வாறு கூறியுள்ளார்.