
ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியைச் சரி செய்ய பத்திரப்பதிவு அலுவகங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மிக அவசியம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கரோனோ நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கினை கடைப்பிடித்து வரும் சூழலில், பதிவுத் துறை அலுவலகங்கள் இயங்குவதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு ஊரடங்கு நேரத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டால், அதைச் சார்ந்து இயங்கும் பத்திர எழுத்தாளர், ஸ்டாம்ப் விற்பனையாளர்கள் மற்றும் நகல் எடுக்கும் கடைகள் என அனைத்தும் இயங்க வேண்டிய சூழல் உருவாகும். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 578 பதிவுத்துறை அலுவலகங்களை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்து கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே ஊரடங்கினை கடைப்பிடிக்கும் காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு உள்ளிட்ட பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்குவதற்குத் தடை விதித்து உத்தரவிடக் கோரி செந்தில் வேல்முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஊரடங்கு நேரத்தில் செயல்பட்டால் கரோனோ தொற்று பரவ வாய்ப்புள்ளது என, பத்திரப்பதிவு எழுத்தாளர் சங்கம் மனு அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசு தரப்பு, ஊரடங்கு காரணமாக அரசுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது என்றும் இதைச் சரி செய்வதற்கும், அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் கடன் பெற நிறுவனங்கள் பதிவு செய்வதற்கும், பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுவது அவசியமானது. தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ள விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, குறிப்பிட்ட அளவு நபர்களை மட்டுமே அனுமதித்து பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் பத்திரப்பதிவு துறை செயல்ப்படுவதில் ஏதேனும் புகார்கள் இருந்தால், அதைப் பத்திரப்பதிவு குறைதீர் மையத்திற்கு அளித்தால், அதை உடனடியாகச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்தது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.