திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிக்கு அருகே உள்ளது படியூர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஏசையன். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. ஆனால், அந்த வீட்டில் ஏசையனின் சொந்த அக்காவிற்கும் பங்கு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த சொத்தில் பாகப்பிரிவினை ஏற்படுத்தப்பட்ட நிலையில், ஏசையன் தனது அக்காவிடம் கடன் வாங்கியுள்ளார்.
இதையடுத்து, ஏசையன் தான் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஏசையனின் சொந்த அக்கா மகனான ஆனந்த், அந்த பணத்தை திருப்பிக் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதனிடையே, கடந்த 14 ஆம் தேதியன்று, ஏசையன் வீட்டுக்கு சென்ற ஆனந்த், அந்த சொத்தில் பங்கு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏசையன், “என்னடா.. சொந்த அக்கா பையன்னு பாத்தா ரொம்ப துள்ளுற.. எவ்ளோ தைரியம் இருந்தா ஊர் விட்டு ஊர் வந்து சொத்துல பங்கு கேப்ப.. ஒழுங்கா வீடு போய் சேரு” எனக் கூறி மிரட்டியுள்ளார்.
அந்த சமயத்தில், இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியுள்ளது. அப்போது, அங்கிருந்த இளைஞர்களை அழைத்து வந்த ஏசையன், ஆனந்தை கயிற்றில் கட்டிவைத்து சுமார் 3 மணிநேரமாக சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட ஆனந்த், தன்னை தாக்கியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அவர்கள் மேல் வழக்குப்பதிவு செய்யாமல், இந்த பிரச்சனையில் சம்பந்தமில்லாத தனது தம்பி ஜெயக்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதியன்று நடைபெற்ற இச்சம்பவத்தில் ஆனந்தை கட்டிவைத்து அடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.