குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், மருத்துவமனையில் நெடுநாட்களாகச் சிகிச்சையில் இருப்பவர்கள் போன்றோருக்கெல்லாம் புத்தகங்களைக் கொண்டுசெல்ல முயற்சிக்கிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நூலக நண்பர்கள்’ திட்டத் துவக்கவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழா முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இத்திட்டத்திற்காக 56.25 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இது அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கான செலவு என்பதைவிட முதலீடு. 2500 நூலகங்களைத் தேர்ந்தெடுத்து 15 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம். இத்திட்டம் 15 லட்சம் பேருக்காவது போய்ச் சேரவேண்டும் என்பது ஆசை. ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் 25 புத்தகங்கள் அந்தந்த மாவட்ட நூலகம் மூலம் வழங்கப்படும். யாருக்கெல்லாம் அந்தப் புத்தகங்கள் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு அதைக் கொண்டுபோய் சேர்க்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
ஒவ்வொரு வார்டுக்கும் தனி அடையாள அட்டை நாங்கள் கொடுத்துவிடுவோம். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், மருத்துவமனையில் நெடுநாட்களாகச் சிகிச்சையில் இருப்பவர்கள் போன்றோருக்கெல்லாம் புத்தகங்களைக் கொண்டுசெல்ல முயற்சிக்கிறோம். வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் இம்மாதிரியான திட்டங்களைச் செயல்படுத்துகிறோம்” எனக் கூறினார்.