தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டம் கோபி, வேட்டைக்காரன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் போலி லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக கோபி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (37), வடுகபாளையம் புதூரைச் சேர்ந்த குமார் (45) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் குயில் என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட போலி லாட்டரி சீட்டுகள் 10 எண்ணிக்கையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த போலி லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.