அண்மையில் அனைத்துலக முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தமிழகத்தில் சில பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்கான விளக்கங்களை தமிழக அரசு கொடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது.
சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதேபோல் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார். 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களை அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என்று தெரிவித்ததோடு மறுபிறவி குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது எனவும் பேசியுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளம்பியுள்ளது. மறுபிறவி குறித்து பேசுவது; ஆன்மீகம் குறித்து பேசுவது பள்ளி மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு எதிர்ப்புகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, புகார் பள்ளிக்கல்வித்துறையினுடைய உயரதிகாரிகளுக்கு சென்ற நிலையில், தமிழக அரசினுடைய கவனத்திற்கும் சென்றது.
அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்? சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா? அல்லது தன்னிச்சையாக இவர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா? என்பது குறித்து முழுமையாக விசாரணை தொடங்கி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கல்விக்கு சம்பந்தம் இல்லாத; உரிய அனுமதி இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளையும் அரசுப் பள்ளிகளில் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு இதுகொண்டு செல்லப்பட்ட நிலையில், இது குறித்து சில அறிவிப்புகளை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். 'பள்ளி குழந்தைகள் அனைவரும் முற்போக்கான மற்றும் அறிவியல் பூர்வமான கருத்துக்களை பெற்றிட வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட ஆணையிட்டுள்ளேன். தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள் தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் அறிவியல் பூர்வமான சிந்தனைகளையும் வளர்ப்பதின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளேன்.
அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ள தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.அறிவாற்றலை கூர்மைப்படுத்திக் கொள்ள தேவையான சிறப்பான கருத்துக்களை ஆசிரியர்களே எடுத்துக் கூற முடியும். தேவையான புத்தாக்க பயிற்சியை சமூக கல்வி துறைசார் வல்லுனர்கள், அறிஞர் பெருமக்களை கொண்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.