நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதியளித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழக அரசு சார்பில், பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் ‘சென்னை சங்கமம்’ எனும் பெயரில் கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாள் தொடங்கப்படும் இந்த விழா ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படும்.
கிராமிய கலைகளை வளர்க்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே உணர்விற்காகவும், சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், தெருக்கூத்து, பாவைக் கூத்து, கும்மி ஆட்டம், தாரைத் தப்பட்டை, மயிலாட்டம், பொம்மலாட்டம், கொம்பு இசை, பறையாட்டம், கிழவன் - கிழவி ஆட்டம், காவடி ஆட்டம், புலி ஆட்டம், கோலாட்டம், கோமாளிக் கூத்து ஆகியவை இடம் பெற்றிருந்தன. அதேபோல் சிலம்பம், வாள் வீச்சு, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளும் இடம் பெற்றிருந்தன.
மேலும், திருநெல்வேலி, இருட்டுக் கடை அல்வா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், காரைக்குடி இட்லி போன்ற தமிழகத்தில் புகழ்பெற்ற அத்தனை உணவு வகைகளும், சங்கமத்தில் சங்கமித்திருந்தன. 2007-ல் தொடங்கப்பட்ட இந்த சங்கமம், அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது. அதையடுத்து, சுமார் பத்தாண்டு காலம் இந்த சங்கமம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் உள்ளதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, பலரும், சென்னை சங்கமம் மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துவந்தனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், கரோனோ பாதிப்பு தணிந்த பிறகு சென்னை சங்கமம் மீண்டும் நடத்தப்படும் என ஏற்கனவே கனிமொழி உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்த கிராமிய கலைஞர்கள் சிலர், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற கனிமொழி, முதல்வரிடம் இதுகுறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.