Skip to main content

சேலத்தில் 28 கடைகளுக்கு சீல்! சமூக விலகலை மீறியதால் அதிரடி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

 


சேலத்தில், சமூக விலகல் உத்தரவை மீறியதாக 28 கசாப்புக் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க, பொது வெளியில் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 3 அடி தூரம் சமூக விலகல் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. எனினும், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அன்று காய்கறி கடைகள், இறைச்சிக்கடைகளில் தமிழகம் முழுவதுமே கூட்டம் நிரம்பி வழிந்தது. நாள்தோறும் மதியம் 2 மணி வரை காய்கறி கடைகள் திறந்திருக்கும் என்றாலும், ஒரு வாரத்திற்குத் தேவையானவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். 


ஒவ்வொரு காய்கறி கடைகளின் முன்பும், சமூக விலகலுக்காக ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டங்கள் வரைந்து வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் மக்கள் கொஞ்சமும் பின்பற்றவில்லை. பலர் முகக்கவசம்கூட அணியாமல் சந்தைகளில் குவிந்து இருந்தனர்.


அதேபோல், ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மட்டும் பெரும்பாலானோர் இறைச்சி உண்பதால், கிட்டத்தட்ட எல்லா இறைச்சிக் கடைகளிலுமே கூட்டம் நிரம்பி வழிந்தது. மார்ச் 22ம் தேதியன்று முதன்முதலாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒருநாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அன்று இறைச்சி பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதனால், இந்த வார ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சிக்காக பெரும் ஆவலுடன் கசாப்புக்கடைகளை மொய்க்கத் தொடங்கினர்.

 

salem



சேலம் மாநகரில் இறைச்சிக் கடைகளுக்கு பெயர் பெற்ற குகை, செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் உள்ள இறைச்சி சந்தைகளில் பெரும்கூட்டம் காணப்பட்டது. அதேபோல் தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் கசாப்புக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


இங்கெல்லாம் சமூக இடைவெளிக்காக மூன்று அடி தொலைவுக்கு கட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. ஆனால், நேரம் ஆக ஆக அந்தக் கட்டங்களில் நிற்பதை மக்கள் தவிர்த்தனர். சமூக விலகல் விதியை பின்பற்ற வைப்பதை அந்தந்த கடைக்காரர்களே பொறுப்பேற்று கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில், வியாபாரம் நடந்தால்போதும் என்ற நோக்கத்தில் இறைச்சிக் கடைக்காரர்களும் சமூக விலகல் விதிகளைக் கண்டுகொள்ளவில்லை.


இந்நிலையில், சேலம் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் குகை கறி மார்க்கெட்டில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது 20 இறைச்சிக் கடைகளில் மக்கள் சமூக விலகல் விதியைப் பின்பற்றாமல் கூட்டமாக நின்று இறைச்சியை வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை ஒழுங்குபடுத்தாமல், கடைக்காரர்கள் வியாபாரம் செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்தக்கடைகளுக்கு உடனடியாக அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.


அதேபோல், அஸ்தம்பட்டியில் மீன் இறைச்சிக்கடைகள், கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளிலும் இறைச்சிக்கடைகளில் ஆய்வு செய்தனர். இப்பகுதிகளிலும் சமூக விலகலை பின்பற்றாத 8 கசாப்புக்கடைகளை மூடி சீல் வைத்தனர். 


இது ஒருபுறம் இருக்க, கொரோனா வைரஸ் தொற்று பீதியால், கறி மார்க்கெட்டுகளுக்கு ஆடு, கோழிகள், மீன் வரத்தும் குறைந்து இருந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் இறைச்சி விலையை வானளவுக்கு உயர்த்தி விற்பனை செய்தனர். இறைச்சி மீதான மோகத்தால் மக்களும் விலையைப் பொருட்படுத்தாமல் வாங்கிச் சென்றதையும் காண முடிந்தது.


ஒரு கிலோ ஆட்டிறைச்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் 800 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை ஆனது. கொரோனா ஊரடங்குக்கு முன்பு வரை ஒரு கிலோ ஆட்டிறைச்சி 600 முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.


அதேபோல், பிராய்லர் கோழிக்கறி ஒரு கிலோ 130 முதல் 160 ரூபாய் வரை விற்பனை ஆனது. இதே பிராய்லர் கோழிக்கறிதான் கடந்த பத்து நாள்களுக்கு முன், கொரோனா பீதியால் பண்ணையாளர்கள் பொதுமக்களுக்கு இலவசமாகவே கொடுத்தனர். சில இடங்களில் கிலோ 5 ரூபாய்க்கு விற்றனர். 


நாட்டுக்கோழி கிலோ 450 முதல் 500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது, மீன் விலையும் கிலோவுக்கு 80 ரூபாய் வரை உயர்த்தி விற்பனை செய்தனர்.
 

சார்ந்த செய்திகள்