தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களில், ஐ.ஜே.கே. (இந்திய ஜனநாயகக் கட்சி) -வின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் சமகவின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "சமக மற்றும் ஐ.ஜே.கே. ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். கூட்டணியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்போம்" எனத் தெரிவித்தனர். புதிய கூட்டணி உருவாக்கப்படுவதன் தொடர்ச்சியாக, கடந்த 27-ஆம் தேதி நடிகர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்தார்.
சசிகலா சந்திப்புக்குப் பிறகு, சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இன்று (03.03.2021) தூத்துக்குடியில் சமகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமகவின் தலைவராக சரத்குமார் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். மேலும் கூட்டத்தில் பேசிய சமகவின் துணை பொதுச்செயலாளர் விவேகானந்தன், கூட்ட மேடையில் “சமக சார்பில் ராதிகா வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவார்” என அறிவித்துள்ளார்.