இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை நாளை (02-09-23) காலை 11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் இந்த விண்கலத்தைச் சுமந்து செல்கிறது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆயிரத்து 475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்நிலையில், விண்ணில் பாயத் தாயாராக இருக்கும் ஆதித்யா எல்1 விண்கலத்தின் கவுண்டவுன் இன்று (01-09-23) காலை 11.50 மணிக்கு தொடங்கியது.
முன்னதாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. உலகில் முதல் முறையாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியுள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குநராக இருந்தவர் தமிழரான விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் ஆவார்.
அதே போல், நாளை சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்- 1 விண்கலத்தின் திட்ட இயக்குநர் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான நிகர் ஷாஜி உள்ளார். தமிழரான இவரின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை கலைமான் நபி பள்ளிவாசல் ஜமாத் பகுதியாகும். இவருடைய பெற்றோர் ஷேக் மீரான் மற்றும் சைத்தூன் பீவி. இவர், செங்கோட்டை எஸ்.ஆர்.எம் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும், இவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த இவர், மேற்படிப்பை பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்றுள்ளார். அதன் பின்னர், இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.
அதைத் தொடர்ந்து, பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு ஆராய்ச்சிக்காக சென்றுள்ளார். இவருடைய கணவர் ஷாஜகான் துபாயில் என்ஜினீயராக இருக்கிறார். இவர்களுடைய மகன் முகமது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக இருக்கிறார். மகள், பெங்களூரில் படித்து வருகிறார். இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். ஆதித்யா எல்-1 விண்கல திட்டம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பா கூட்டமைப்பிற்கு பிறகு சூரியனை ஆய்வு மேற்கொள்ளும் நாளாவது நாடாக இந்தியா சரித்திரத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.