பன்முகத் தன்மையை சிதைக்கும் அடையாளமாக சமஸ்கிருதம்
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பேச்சு
புதுக்கோட்டை செப்.11- இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் அடையாளமாக சமஸ்கிருதம் உள்ளது என்றார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை ‘திடல்’ இலக்கியக்கூடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய அவர் மேலும் பேசியது:
மகாத்மா பூலே போன்ற அறிஞர்கள் மநுதர்மத்தின் மீதுதான் தங்களது முதல் தாக்குதலைத் தொடுத்தனர். மநுதர்மத்தைவிட சாதியப் பாகுபாட்டை கூடுதலாக வலியுறுத்தியது சைனமதம். தமிழ் மநுதர்மத்திற்கு மட்டுமல்லாது சைனமதத்திற்கும் எதிரானது. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் அடையளமாக சமஸ்கிருதம் உள்ளது. ஒருங்கிணைப்பின் அடையாளமாக தமிழ் உள்ளது.
தமுஎகசவில் மநுதர்மத் தந்திரத்தை முறியடிப்போம் என்ற முழக்கத்தை வைத்து இருக்கிறீர்கள். மறுதந்திரத்தை முறியடிப்போம் என்று இருந்தாலே போதும். அதுபோல முற்போக்குத் தமிழ்மரபை முன்னெடுப்போம் என்பதில் முற்போக்கு என்ற சொல் தேவையில்லை என்பதே என்கருத்து. ஏனென்றால், பக்தி இலக்கியங்களிகூட தமிழ்மரபை முன்னெடுக்கும் போராட்டத்தை நடந்துகொண்டு இருக்கிறது. வைதீகம் என்ற ஆதிக்க உணர்வை, கோட்பாட்டை தகர்த்து வந்துள்ளது தமிழ்மரபு.
இந்தியவிலேயே குறைவான மூடநம்பிக்கை உள்ளவர்கள் தமிழர்கள் என்றார் கார்டுவெல். தமிழில் மூட நம்பிக்கைக்கான சொற்கள் மிகவும் குறைவு. சகுனம், ஜோதிடம், சம்பரதாயம் போன்ற வடமொழிச் சொற்களே தமிழில் புழங்கப்படுகிறது. தற்பொழுது படித்த பெண்கள் அதிக மூடநம்பிக்கைக்கு ஆட்படுவது வேதனையளிக்கிறது. சங்ககாலப் பெயர்கள் எதுவும் சாதி, மதங்களைச் சார்ந்து இருக்காது. அர்த்தம் இல்லாமல் தமிழில் எந்தச் சொல்லும் கிடையாது. அகத்தினை வாழ்வியல் நெறிமுறைகளை இலக்கன மரபுக்கு உட்பட்டு எழுதிய நமது தமிழ்மரபு.
தமிழ்மொழி முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தது. வைதீகர்கள் தருக்கமுறைகளை முற்றிலுமாக எதிர்த்துவந்துள்ளனர். கேள்வி கேட்பவர்கள் நிந்திக்கப்படுவார்கள் என்கிறது வேதங்கள். அது கேள்விகளில் இருந்து தப்பிக்கும் முறையை வகுத்துள்ளது. தமிழ் அகத்தினை மரபு தருக்கமுறையுடன் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த உலகம் படைக்கப்பட்டது அல்ல. தோன்றியது என்றும் அணுக்களின் சேர்க்கையால் உருவானது என்றும் சொல்கிறது. ஆங்கிலத்தில் ‘ஆட்டம்’ என பிரிக்க முடியாதது என்ற பொருளில்தான் சொல்லப்பட்டது. சேர்ந்து இருப்பது எனப் பொருள்படும்படி அணு என்று அழைக்கப்படுகிறது. மனிதநேயத்தை வலியுறுத்துவதும் தமிழ்மரபுதான்.
இத்தகைய சிறப்புமிக்க தமிழ்மரபை சிதைத்து வேதப்பண்பாட்டை புதுப்பிக்கும் சூழ்ச்சி தற்பொழுது நடந்துகொண்டு இருக்கிறது. அதன் ஒருவகைதான் தற்பொழுது கொண்டுவரப்படும் நீட் தேர்வுமுறை. இந்த அபாயத்தை எதிர்க்கிற, முறியடிக்கிற வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும். இவ்வாறு பேராசிரியர் நெடுஞ்செழியன் பேசினார்.
கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரமா.ராமநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சு.மாதவன் முன்னிலை வகித்தார். செயலாளர் சு.மதியகன் வரவேற்றார். கவிஞர் ராசி.பன்னீர்செல்வன் அறிமுறை உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன் தொடக்கவுரையாற்றினார். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் ரெ.வெள்ளைச்சாமி நன்றி கூறினார். ராஜலெட்சுமி, சரவணன் ஆகியோர் விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடினர்.
-இரா. பகத்சிங்