Skip to main content

கோயம்பேட்டில் அலைமோதிய கூட்டம்... பரிசோதனை கட்டாயம் தேவை...!

Published on 23/03/2020 | Edited on 24/03/2020

சீனாவில் வுஹான் நகரில் தொடங்கி உலகமெங்கும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த கண்ணுக்குத் தெரியாத உயிர்கொல்லி கரோனா இந்தியவையும் விட்டு வைக்கவில்லை. சுய ஊரடங்கினால் மட்டுமே கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில் 22 ந் தேதி இந்தியா முழுவதும் நடந்த ஒரு நாள் சுய ஊரடங்கு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் கரோனா பரவியிருந்த சென்னை, ஈரோடு மாவட்டங்கள் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க் கிழமை மாலை 6 மணி முதல் 31 ந் தேதி வரை ஊரடங்கு அமலுக்கு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால் தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவித்தார். இந்தத் தகவலையடுத்து தமிழ்நாடு முழுவதும் இருந்து வெளியூர்களில் வேலை செய்து வந்த இளைஞர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

 

 passenger crowd - Koyampettu - corona virus

 



அதே போல தான் சென்னையில் தங்கி வேலை செய்த இளைஞர்கள், படிக்கும் மாணவர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர். இதில் ஒரு சதவீதம் பேர் கூட முகக் கவசம் அணியவில்லை. முகக் கவசம் அணிந்திருந்தவர்களும் மூக்கு பகுதியை மறைக்காமல் வாயை மட்டும் மூடிக்கொண்டு கூட்டத்தில் உரசிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. 

குறைந்தது 3 அடி இடைவெளி வேண்டும் முகக் கவசம் அவசியம் அணிய வேண்டும் அப்போது தான் கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளமுடியும் என்று விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் கூட கோயம்பேட்டில் எள் போடும் அளவுக்கு கூட இடைவெளியும் இல்லை. பாதுகாப்புக்கான முகக் கவசமும் இல்லை. செவ்வாய்க் கிழமை காலை அவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து இறங்கப் போகிறார்கள். அவர்கள் கோயம்பேட்டின் முண்டியடிக்கும் போது கரோனா நோய்த் தொற்று உள்ளவர் ஒருவர் இருந்திருந்தாலும் கூட அந்த கிருமிகள் எத்தனை ஆயிரம் பேருக்கு பரவும் என்ற கேள்வி எழுகிறது. மேலும் இப்படியான அறிவிப்பு செய்யும் முன்பு வெளியூர் நபர்கள் இடையூறு இன்றி செல்ல போதிய பேருந்து வசதிகளைச் செய்து கொடுத்திருக்க வேண்டும்.

 



அறிவிப்பு வெளியாகி கோயம்பேட்டில் ஒட்டி உரசி முண்டியடித்து ஊருக்கு பஸ் ஏறிவிட்டார்கள். அடுத்து என்ன செய்வது..? என்ற கேள்வியும் எழுகிறது. உடனடியாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளுக்குப் பேருந்துகளை அனுப்பி அதுவரை யாரையும் இடையில் இறக்காமல் அனைவரையும் முதற்கட்ட சோதனைகள் செய்த பிறகு அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் வேகமாக வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும். இல்லை என்றால் தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவ வாய்ப்புகள் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

சென்னை மற்றும் மற்ற ஊர்களில் இருந்து சொந்த ஊருக்குப் பேருந்துகளில்  திரும்புவோர் அவசியம் தாங்களாகவே அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டு திரும்பினால் உங்கள் கிராமத்தை நீங்கள் காப்பாற்றலாம். இதற்காக சில மணி நேரங்கள் தாமதம் ஆகும் என்று நினைக்க வேண்டாம். உங்களுடைய இந்த பொறுமை பல உயிர்களைக் காப்பாற்றும். அரசும் இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
 

சார்ந்த செய்திகள்