சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில அமைப்பு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தில் மாநில அமைப்பாளர் துரை. சேகர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தங்கராசு அனைவரையும் வரவேற்றார்.
இதில் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார். தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.ஜெயச்சந்திர ராஜா, மாநில இணை பொதுச் செயலாளர் சிவக்குமார், சுவாமிநாதன், விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்படும் லாப நட்ட கணக்குகளை வைத்துக்கொண்டு கூட்டுறவும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணப்பயன்களை தடுப்பது கண்டிக்கத்தக்கது. கூட்டுறவுத்துறை நியாய விலை கடை பணியாளர் ஓய்வுக் கால சலுகைகள் குறித்து கூட்டுறவுத் துறை ஆய்வு செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பலனும் ஊழியர்களுக்கு ஏற்படவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பண பலன்கள் அவர்களுக்கு சென்றடையாவிட்டால் தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்குள் கூட்டுறவுத் துறையில் ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் பிரச்சினைகளை கூட்டுறவுத்துறை தீர்க்க வேண்டும் இல்லையென்றால் செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் இது குறித்து போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்'' எனக் கூறினார்.