தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நுங்கம்பாக்கம் பகுதியில் சீரமைக்கப்பட்டுள்ள சொக்கட்டான் சாலையின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நே. சிற்றரசு, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், ஜெ.எஸ். அகஸ்டின் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.பி. தாயநிதி மாறன் பேசியதாவது, “தமிழக முதல்வர், அண்ணா கூறியது போல ‘மக்களிடம் செல், மக்களிடம் பணியாற்று, அவர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும்’ என்று எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் நாங்கள் இருவரும் அமைச்சர் சேகர்பாபுவிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தோம். பல ஆண்டுகாலமாக இந்த சொக்கட்டான் சாலையில் சாலை வசதி சீராக இல்லாமல் மக்கள் கடும் அவதிகளை எதிர்கொண்டு வந்தனர். ஒவ்வொரு முறையும் சட்டமன்றங்களில் எடுத்துக் கூறினாலும் அதற்கு தடங்கலைப் போட்டுவந்தனர். அதனால் இந்தப் பகுதி மக்களுக்கு ஒரு விடியல் இல்லாமல் இருந்தது.
இந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவிடன் கொண்டு சென்ற உடனே இங்கு சாலை போடுவதற்காக அவர் அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செய்துகொடுத்தார். இந்தப் பிரச்சனை, அம்மி கல்லை நகர்த்தவே முடியாது போன்று இருந்தது. ஆனால் அதையும் நாங்கள் இணைந்து முடித்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அதேபோல் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீராக இல்லாமல் இருக்கிறது. அதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.