தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது..
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு அருகே அமைந்துள்ளது காளிங்கராயன் பாளையம். இந்த பகுதியில் வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டுள்ளது. இங்கு 47 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில், இந்த பள்ளியிலும் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பள்ளியில் சமையலராக இருப்பவர் பட்டியலின வகுப்பைச் சார்ந்த ஒரு பெண். இவர், இந்த பள்ளி மாணவர்களுக்கு உணவு சமைத்து அவர்களுக்கு பரிமாறி உள்ளார். ஆனால், இதையறிந்த மாற்று சாதியினர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். உணவு சமைத்தவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் பள்ளி குழந்தைகளுக்கு உணவை வழங்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, பள்ளி குழந்தைகளை காலை உணவை சாப்பிட விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, உணவு சமைக்கும் பட்டியலின பெண்ணை மாற்ற முடியாது என கறாராகக் கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாற்று சாதியினர், “எங்க குழந்தைகளுக்கு டீசி கொடுத்துடுங்க. நாங்க வேற ஸ்கூலுக்கு போறோம்” என கூறிவிட்டு, காலை உணவைப் புறக்கணித்துவிட்டு சென்றனர்.
இத்தகைய சூழலில், அடுத்த நாள் மீண்டும் அதே பெண் சமையலர் உணவு சமைத்த நிலையில், 47 மாணவர்களில் 13 பேர் பள்ளிக்கு வரவில்லை. ஏதேதோ காரணங்கள் சொல்லி பள்ளி மாணவர்களை வீட்டிலேயே வைத்திருந்தனர். ஆனால், பள்ளிக்கு வந்த 34 மாணவர்களும் காலை உணவை சாப்பிட்டனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வள்ளிபுரம் பஞ்சாயத்து தலைவர் முருகேசனிடம் கேட்ட போது, இந்த சம்பவம் நடந்தது உண்மை தான். அவங்க என்ன சொல்றங்கன்னா. அந்த தாழ்த்தப்பட்ட பொண்ண சமைக்க வேண்டாம்னு சொல்லல. எங்களுக்கு டீசி கொடுங்க. நாங்க வேற ஸ்கூலுக்கு போய்டுறோம்னு சொல்ராங்க. ஆனா, நாங்க அன்னைக்கே எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டோம். இனிமே பிரச்சனை வராது” என முடித்துக்கொண்டார்.
அதன்பிறகு, அந்த பெண் சமையலறை தொடர்புகொண்ட போது நேரடியாக பேசவோ, பேட்டி வழங்கவோ மறுத்த அவர், "நான் காலைல குழந்தைகளுக்கு உணவு கொடுத்துட்டு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு போவேன். இதுவரைக்கும் என்கிட்ட நேரடியாக யாரும் பிரச்சினை செய்யல. ஸ்கூலுக்கு வந்துதான் பேசுனாங்க" என தெரிவித்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பெரும்பாலான குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் எழுந்தால் காவல்துறை மூலம் முறையான சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே, அவினாசியில் கடந்த 2018ல் திருமலைக்கவுண்டம்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமையலர் பாப்பாள் சமைக்க கூடாது என பாத்திரங்களை தூக்கி எறிந்து அவரை கடுமையாக திட்டிய சம்பவம் தொடர்பாக, தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது, இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவிநாசி பகுதியில் மீண்டும் அரங்கேறிய சாதிய வன்கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.