நடிகர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து அச்சங்கத்தின் பதவிக் காலம் முடிவடைந்த நிர்வாகிகள் வழக்கு தொடர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடிகர் சங்க நிர்வாகப் பணிகளை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம், பொருளாளர் நடிகர் கார்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வணிக வரித்துறை செயலாளர், பதிவுத்துறை ஐஜி, தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் சார்பில் மாவட்ட பதிவாளர் ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிப்படி, சங்கத்தின் பொதுச்செயலாளர் மட்டுமே வழக்கு தொடர முடியும். கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியே பதிவு காலம் முடிவடைந்த நிலையில், நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர், பொருளாராக இருந்த கார்த்தி ஆகியோர், சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிக்க எந்தக் குழுவும் இல்லாததால் சிறப்பு அதிகாரி ஏன் நியமிக்க கூடாது என விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் அளித்த விளக்கத்தில் நடிகர் சங்க வழக்குகள் நிலுவையில் இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது. இவ்வாறு நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்களிடம் விளக்கம் பெற்ற பிறகே சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இதையடுத்து நடிகர் சங்கத் தேர்தல் வழக்குகளில் முடிவு எட்டும் வரையோ, அல்லது ஓராண்டிற்கோ சிறப்பு அதிகாரியை நியமிப்பது என அரசு உத்தரவிட்டது. எனவே, நடிகர் கார்த்தி மற்றும் நாசர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கின் விசாரணையை நீதிபதி கல்யாண சுந்தரம் வரும் நவம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.