மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கல்விக் கொள்கையை திணிக்கக்கூடாது என் அன்புமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''சமீபத்தில் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை கொண்டு வந்தார்கள். அதனை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக்கு கோரிக்கை வைத்தார்கள். அதுவும் சமீபத்தில் நம்முடைய துணை ஜனாதிபதியும் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தேசிய கல்விக் கொள்கையில் நல்லது இருக்கிறது. பாதகங்களும் இருக்கிறது. ஒரு உதாரணம் மும்மொழிக்கொள்கை இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு தேவையானது இருமொழி கொள்கையை காலங்காலமாக கடைபிடித்து வருகிறோம். இதுபோன்ற சில மாநிலங்களுக்கு பாதகமான விஷயங்கள் புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.
எனவே மத்திய அரசு அதை நீ திணிக்க கூடாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொள்கை முடிவு எடுக்க அதிகாரம் இருக்கிறது. இந்திராகாந்தி பிரகடனபடுத்திய அவசரகால காலத்தில் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டார்கள். அதனால் வந்த பிரச்சனைதான் இது. கல்வி என்பது மாநில பட்டியலில் மீண்டும் வரவேண்டும். அப்படி இருந்தது என்றால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர்களுடைய கொள்கைக்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதேநேரம் மத்திய அரசு திணிக்க கூடாது. அப்படி மத்தியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றல் நாங்கள் நிதி கொடுக்க மாட்டோம் என்றெல்லாம் சொல்லக்கூடாது.
மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு அவசியம் இருக்க வேண்டும். நாங்கள் பள்ளிக்கூடம் படிக்கும்போது மாரல் சயின்ஸ் என்ற கிளாஸ் இருந்தது. அதில் நல்லது கற்றுக் கொடுப்பார்கள். இப்பொழுது அந்த கிளாஸ் இல்லை எடுத்து விட்டார்கள். நீதி போதனை வகுப்பு இருக்க வேண்டும். அதில் நல்லதை கற்றுக் கொடுக்க வேண்டும். மது அருந்தக்கூடாது; போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது; பெண்களை மதிக்க வேண்டும்; கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் போன்ற நிறைய நல்லவைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்'' என்றார்.