தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், 2026ல் வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு எனக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என அடுத்தடுத்து நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது கட்சியின் கொடி அறிமுக நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபனா மற்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விஜய்யால் அறிமுகம் செய்யப்பட்ட கொடியில் கீழும் சிவப்பு நிறம் இருக்க நடுவில் மஞ்சள் நிறம். அதில் மஞ்சள் நிற பகுதியில் 2 போர் யானைகளுக்கு நடுவில் வாகை மலர் மற்றும் அந்த மலரைச் சுற்றி 23 பச்சை நிற நட்சத்திரங்களும், 5 வெளிர் நீல நிற நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார் விஜய். அதில், ‘தமிழன் கொடி பறக்குது... தலைவன் யுகம் பொறக்குது... வீரக் கொடி... விஜயக் கொடி’ உள்ளிட்ட வரிகள் இடம்பெற்றிருந்தது.
கட்சிக்கொடியை அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் கொண்டாடி ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கட்சிக்கொடியை வெளியிடப்பட்ட முதல் நாளே குவிந்த ஆதரவு போலவே சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. நடிகர் விஜய்யின் தவெக கட்சிக் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தப் பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருக்கும் ஆனந்தன், தவெக கொடியில் யானை சின்னத்தை சட்டப்படி பயன்படுத்த முடியாது. யானை சின்னம் பயன்படுத்தியது தொடர்பாக பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.