கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், தற்போது நடைபெற்றுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்களில் தெளிவு இல்லை என்பதால் இரண்டாவது முறை மாணவியின் உடலை உடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், ''சார் இது வேலை நிறுத்த போராட்டம் கிடையாது. தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்புதான் கேட்கிறோம். மருத்துவமனைகளுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டபோது பாதுகாப்பு கொடுத்து சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சட்ட பாதுகாப்பு வேண்டும் என்று பெற்றோர்கள் எல்லாம் எங்களை கேட்கிறார்கள். மாணவியின் உயிரிழப்புக்கு நாங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் என்ன குற்றம் என்பதைக் கண்டுபிடித்து இது தற்கொலையா அல்லது கொலையா என கண்டுபிடிக்கணும். இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக செயல்படவில்லை. மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசு பள்ளியாக இருக்கட்டும், தனியார் பள்ளியாக இருக்கட்டும் முதலில் மாணவர்கள் மனதளவில் தயார்ப்படுத்த வேண்டும். ஆனால் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றால் அதை கையிலெடுத்துக்கொண்டு அராஜக செயல் இருக்கக் கூடாது. இதுதான் இறுதியாக இருக்க வேண்டும்'' என்றனர்.