தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளி தொடர்ந்து மூன்றாண்டு சாதனை படைத்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூரில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளிக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையான மாணவர் சேர்க்கையும் மூன்றாமாண்டு சாதனை புரிந்துள்ளது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு 1 முதல் 5 ஆம் வகுப்பு 100 சதவிகித சேர்க்கை நடைபெற்றுள்ளது. தற்போதும் அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்று வட்டாரங்களில் உள்ள சிலுக்குவார்பட்டி, பள்ளபட்டி, கொடைரோடு உள்பட சில கிராமங்களிலிருந்து தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக அணிவகுத்து நின்று ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
இதுபற்றி தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வந்த பெற்றோர்களிடம் கேட்டபோது... மற்ற அரசு பள்ளிகள் போல் இல்லாமல் இப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வி, ஆங்கில வழிக்கல்வி இரண்டும் கற்றுத் தரப்படுகிறது. கூடுதல் பயிற்சியாக வாசிப்பு திறனுக்காக தினசரி நாளிதழ்கள் வரும் செய்திகளை வாசிக்கப்படுகிறது. அதுபோல் பள்ளியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டும் கட்டமைக்கப்பட்டது செயல்முறை கற்பித்தல் பின்பற்றப்படுகிறது. இப்பள்ளியில் மற்ற அரசு பள்ளிகள் போல் இல்லாமல் சுகாதாரம் பேணிக்காப்பதற்காக உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் ஸ்மார்ட் க்ளாஸ் என்ற பாடத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவாக வழங்கப்படுகிறது. அதனால் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பலரையும் எங்களைப் போல் உள்ள பெற்றோர்கள் தற்போது இந்த பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர். இன்று நடந்த மாணவர் சேர்க்கையில் முதல் நாள் வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர் என்றனர்.
அம்மையநாயக்கனூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் போல் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் இப்படி முயற்சி செய்தால் கிராமப்புற மாணவர்கள், தனியார் பள்ளிகளை தேடி செல்லும் நிலை வராது. தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகளும் தரம் உயரும்!