ரெம்டெசிவர் மருந்து மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நிலையில், நாளொன்றுக்கு 300 பேருக்கு மட்டுமே ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகள் மருந்துகளை நோயாளிகளுக்குப் பயன்படுத்தினாலும் தனியார் மருத்துவமனைகள் அதிக அளவில் இந்த ரெம்டெசிவர் மருந்தை வாங்கித்தர வற்புறுத்தி வருகின்றனர்.
அதிலும், தனியார் மருத்துவமனைகள் தங்களுடைய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகளின் முழு விவரங்களையும் சேகரித்து, தங்களுடைய மருத்துவமனை ஊழியர்களைக் கொண்டு தினந்தோறும் அரசு விற்பனை செய்யும் இடத்தில் நோயாளிகள் உறவினர்களைப் போல வரிசையில் நின்று கொண்டு சிலர் மருந்துகளை வாங்கி சேகரித்து வைத்துக்கொள்ளும் பணியை தற்போது தொடர்ந்து செய்து வருகின்றனர்.
ஆனால், நோயாளிகளுக்கு இந்த மருந்து தேவைப்படும் போது நோயாளிகளின் உறவினர்களிடம் மருந்தை நீங்களே வெளியில் வாங்கித் தாருங்கள் என்று கூறுகின்றனர். பின்னர் அவர்களை ஒரு நாள் முழுவதும் அலைக்கழித்துக் கிடைக்கவில்லை என்றால் நாங்களே அந்த மருந்தைப் போடுகிறோம் என்று கூறி 2 டோஸ் மருந்துகளைத் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் போட்டுவிட்டு அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் மருந்திற்காக மட்டும் வசூலிக்கின்றனர்.
இந்த மருந்து வெளியே கள்ளச் சந்தைகள் எல்லாம் தற்போது விற்பனை செய்யப்படுவதில்லை தனியார் மருத்துவமனைகளை தங்களுடைய ஊழியர்களைக் கொண்டு நோயாளிகளின் மொத்த தகவல்களையும் அரசிடம் காட்டி மருந்துகளை மொத்தமாக வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மருந்துகளை வாங்க வரும் ஒவ்வொருவரையும் உரிய நோயாளிகளுக்கான ஆவணங்களையும் அவர்கள்தானா, உண்மையான உறவினர்களா என்பதையும் ஆய்வு செய்து மருந்துகளைக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.