புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் உள்ள விஜய் என்ற தனியார் மருத்துவமனையில் முத்துக்குடா கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜா மகள் தாயம்மாள் (24) செவிலியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பணிக்கு சென்றுள்ளார். இன்று காலை தாயம்மாளுடன் வேலை செய்த சில பெண்கள் தாயம்மாள் மருத்துவமனையிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனை அறிந்த டாக்டர்.முத்து, செவிலியர் தாயம்மா உடலை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று வைத்துவிட்டார் என்ற தகவலை கூறியுள்ளனர்.
தகவல் அறிந்து கதறி துடித்த பெற்றோரும், உறவினர்களும் மணமேல்குடி அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். தொடர்ந்து தாயம்மாள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை. அவளை கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடுகிறார்கள். அதனால் விஜய் மருத்துவமனை நிர்வாகி டாக்டர்.முத்து மீதும் உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர். புகாரையடுத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் போலீசார். அதனால் நேரம் ஆனதால் கொதித்தொழுந்த உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது.
அதன் பிறகு டாக்டர்.முத்து, ஊழியர்கள் மாரிமுத்து, மற்றும் ஒருவர் என மூன்று பேரும் கைது செய்யப்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் பிரேதப் பரிசோதனைக்கு வெளியூர் மருத்துவர்கள் வரவேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்ற உறவினர்களின் கோரிக்கை எற்கப்பட்டது.
ஆனால் மருத்துவமனை வட்டாரத்தில் தாயம்மாள் மருத்துவமனை பணியாளருடன் அதிகாலை பேசிக் கொண்டிருந்ததை டாக்டர் கண்டித்ததால் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை கொண்டார் தாயம்மாள் என்று காரணம் கூறப்படுகிறது. அப்படி தற்கொலை செய்த கொண்டதால் வீட்டிற்கு தகவல் சொல்லாமல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு சென்றார்கள். அதனால் தான் சந்தேகமாக உள்ளது என்கின்றனர் உறவினர்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published on 28/03/2018 | Edited on 28/03/2018