தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த ஒன்றரை மாத காலமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. அரசு மருத்துவமனைகளிலும், சிறப்பு சிகிச்சை மையங்கள் மூலமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அதே சமயத்தில், உரிய கட்டமைப்பு வசதிகளுடன், அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சிகிச்சையளிக்க சில தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாமல் கரோனா நோயாளிகளுக்கு நாள்தோறும் சிகிச்சை கொடுத்துவந்ததாக கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார் வந்தது. அதனையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்ற அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அதிக அளவில் கூட்டத்தைச் சேர்க்க வேண்டாம், அரசின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில், இரண்டு நாட்களாக அதிக அளவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்ததாக குற்றச்சாட்டு மேலும் எழுந்தது. அதையடுத்து, நேற்று (09.06.2021) மருத்துவத்துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு, வட்டாட்சியர் பலராமன், காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகளும் போலீசாரும் அதிரடியாக சென்று, மருத்துவமனை தொற்று ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும், அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாததாலும் மருத்துவமனைக்குத் தற்காலிகமாக பூட்டுப் போட்டு பூட்டினர். இதனிடையே 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், மொத்த விற்பனையில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்களும், மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குவோர், தச்சர் போன்ற சுயதொழில் செய்வோர் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை பணிபுரியவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் விருத்தாச்சலம் பகுதியில் அரசு உத்தரவுகளை மீறி அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றுவந்தது. இதுகுறித்து அறிந்த விருத்தாச்சலம் வட்டாட்சியர் சிவக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் ஆகியோர் விதிகளை மீறி செயல்படும் கடைகளைக் கண்டறிந்து சீல் வைத்தனர். நேற்று முன்தினம் விருத்தாசலம் பகுதியில் 8 கடைகளுக்கு சீல் வைத்த நிலையில், நேற்று விருத்தாசலம் பங்களா தெருவில் அனுமதியின்றி திறக்கப்பட்டிருந்த ஃபேன்சி ஸ்டோருக்கு சீல் வைத்தனர். அப்போது ஃபேன்சி ஸ்டோர் உரிமையாளர் வட்டாட்சியரிடம், “என் கடைக்கு எப்படி சீல் வைக்கலாம்” என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் உள்ளிட்ட போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதேபோல் பெண்ணாடம் பேரூராட்சியில் தேரடி வீதியில் உள்ள 2 ஜவுளிக்கடைகளில் துணிகள் விற்பனை நடந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பெண்ணாடம் பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி, பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் திறந்திருந்த 2 ஜவுளி கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். பின்னர் கடைவீதி பகுதியில் உத்தரவை மீறி திறந்திருந்த நகை அடகுக் கடை, கவரிங் கடை உள்ளிட்ட 18 கடைகளுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.