கடந்த பல ஆண்டுகளாக பயன்பாட்டிலும் நடைமுறையிலும் இருக்கிற வேளாளர் என்கிற பெயரை மாற்றுச் சமுதாயத்தினருக்கும் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேளாளர் பெயரை வழங்க முடிவு செய்துள்ள தமிழக அரசின் போக்கைக் கண்டித்தும் ஈரோடு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள், அதன் கொள்கைபரப்பு சௌலாளர் சூரியமூர்த்தி தலமையில் ஈரோட்டில் 20-ந் தேதி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டே திடீரென சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஏழு சமுதாயப் பிரிவுகளை உள்ளடக்கிய பழைய பெயருக்கு மாற்றாக புதிதாக தேவேந்திர குல வேளாளர் என்கிற பொதுப்பெயர் வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று அந்த பொதுப்பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன் ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் ஈரோடு மாவட்டம் லக்காபுரத்தில் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, வேளாளர் என்கிற பெயரை வேறு சமுதாயப் பிரிவினர் கடந்த பல ஆண்டுகளாகவே பயன்படுத்தி அடையாளம் பெற்று வந்துள்ள நிலையில் குழப்பத்தை ஏற்படுத்திடும் வகையில் புதிதாக வேளாளர் பெயரை வேறு சமுதாயப் பிரிவினரும் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட சமுதாயப் பெயரையும், அடையாளத்தையும் தாரை வார்த்திடக் கூடாது என்றும், தமிழகத்தில் இதுபோன்ற தவறான முடிவின் அறிவிப்பால் சமூக அமைதி கெடுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும், அதுபோன்ற நிலைகள் ஏற்படாமலிருப்பதற்கு ஏற்கெனவே நடைமுறையிலிருக்கும் சமுதாயப் பெயரை வேறு சமுதாயத்தினருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற்றிட வேண்டும் என்றும், விரைவில் யாருக்கும் பாதிப்பில்லா வகையில் முடிவினை எடுத்திட வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் திடீரென மாநில எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைச் சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினரை சமாதானப் படுத்தி போராட்டத்தைத் திரும்பப் பெற வைத்து சாலையிலிருந்து அகற்றினர் இந்தப் போராட்டம் காரணமாக லக்காபுரம் சாலைப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.