Skip to main content

அரசு கல்லூரியில் தனியார் கட்டணம்! - தொடர்ந்து போராடும் மருத்துவ மாணவர்கள்!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

Private college fees in government colleges - medical students who continue to struggle ..!


ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. 

 

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும் தற்போது கரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் இது செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட பிறகும், தனியார் மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணமான (ஆண்டு ஒன்றிற்கு)  ரூ.4 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. 

 

ஆனால், மற்ற அரசு கல்லூரியில், ஆண்டுக் கட்டணம் 13 ஆயிரத்து 600 ரூபாய்தான். இந்த தொகையைத்தான் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும். இந்த கோரிக்கையை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தொடர்ந்து தமிழக அரசிடம் முன்வைத்து பல போராட்டங்களையும் நடத்தினர்.


அப்போது, விரைவில் அரசு அறிவிப்பு வரும் என்று உயரதிகாரிகள், மாணவர்களைச் சமாதானப்படுத்தி போராட்டங்களை கைவிட வைத்தனர். இந்த நிலையில், 5ஆம் தேதி மாணவ, மாணவியர்கள் மீண்டும் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று 6ஆம் தேதி இரண்டாவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து கல்விக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் கல்லூரியின் முன்பு அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


தமிழக அரசு கல்விக் கட்டணத்தைக் குறைத்து உத்தரவு வழங்கும் வரையில் இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு கல்லூரியாக அறிவித்த பிறகு தனியார் கல்லூரி போல் மாணவர்களிடம் அரசே கட்டணம் வசூலிப்பது கொள்ளையடிப்பது போல உள்ளது என்று மாணவர்கள் தமிழக அரசு மீது கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்