சேலம் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைக்குள் கஞ்சா, செல்போன், பீடி, சிகரெட் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. எனினும், சிறைக்காவலர்கள் துணையுடன் சில கைதிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வந்து, பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் கைதி ஒருவர் செல்போன் பயன்படுத்தி வருவதாக சிறைத்துறை நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறை எஸ்.பி. (பொறுப்பு) வினோத், சந்தேகத்திற்குரிய கைதியை நேரடியாக சோதனை நடத்தினார். அவரிடம் இருந்து செல்போன் சார்ஜரை பறிமுதல் செய்தார்.
இதையடுத்து சோதனைக் குழுவினர் பிரவீன், விமல், அஷ்வின் ஆகிய கைதிகளிடம் தனியாக சோதனை நடத்தினர். அவர்களிடம் இருந்து செல்போன், சிம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கைதிகளிடம் செல்போன், சார்ஜர், சிம் கார்டு எப்படி சென்றது? இதில் சிறைக்காவலர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் சிறைத்துறை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.