சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த சிறை கைதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சங்கர். இவர் மீது திருட்டு, கொலை, கொள்ளை ஆள் கடத்தல் என 10க்கும் மேற்பட்ட வழக்குள் உள்ளது. இந்த நிலையில் கோவையில் சாராயம் தொடர்பான விவகாரத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இவர் மீதான பழைய வழக்கிற்காக 13ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டு போலீசார் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விசாரணையின் தேதியை மீண்டும் தள்ளி வைத்தார். இந்த நிலையில், சங்கர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி சங்கர் நம்மிடம் பேசியபோது, “நான் கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். அந்த அளவிற்கு கோவை சிறையில் போலீசார் அடித்து சித்திரவதை செய்தனர். உணவும் போதிய அளவிற்கு கொடுப்பதும் இல்லை; ஒவ்வொரு இரவும் சித்திரவதைதான். எனக்கு இரு குழந்தைகள் உள்ளன. சென்னையில் இருந்து என் மனைவி என்னை பார்ப்பதற்கு கோவை வந்தாலும் பார்ப்பதற்கே அனுமதில்லை. அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன்” என்றார்.