முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் தரக்கோரி ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதியிருந்த கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை நேற்று விளக்கம் அளித்திருந்தது. அந்த விளக்கத்தில் இருந்தவை உண்மைக்குப் புறம்பானவை என்றும் அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஒப்புதலை ஆளுநர் வழங்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீண்டும் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் மதுரை மேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், ''செந்தில் பாலாஜி வழக்கு எவ்வளவு வேகமாகச் செய்ய வேண்டும் என்று துடிக்கின்ற ஆளுநர், அதிமுகவுடைய அமைச்சர்களுக்கான வழக்குக்கு நேற்று என்ன பதில் சொல்லி இருக்கிறார் என்று தெரியும். இதை பாஜக உறுப்பினராக அவர் சொல்லலாம் உரிமை இருக்கிறது. ஆனால் ஆளுநராக இப்படிச் சொல்லக்கூடாது. அரசியல் சார்போடு ஒரு கட்சி பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் பொது நாகரிகத்தை உதிர்த்து அப்பட்டமாக அரசியல் அடையாளத்தோடு ஒரு ஆளுநர் செயல்படுவது ஒரு மாநிலத்திற்கான இழுக்கு.
சைவம், வைணவம் என்பதற்கு இடையே இருக்கக்கூடிய முரண்பாடு, இந்து மத அடையாளங்களுக்குள்ளேயே கோவிலுக்குள் இவர்கள்தான் போக முடியும் இவர்கள்தான் போக முடியாது என இருக்கின்ற பிரிவினைகள் இப்படிப் பல பேர் விஷயங்கள் இருக்கிறது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர்களுக்கான நம்பிக்கைகள் அவரவர்களுக்கான முறைகள் இருக்கிறது. இதை எல்லாத்தையும் விட்டுவிட்டு பொது சிவில் சட்டம் என்று பிரதமர் மோடி பேசுவது 2024 தேர்தலை மனதில் வைத்து வெறுப்பை, பகைமையை மக்களிடம் உருவாக்குவது தான் அவர்களுடைய அரசியல்.
அந்த நோக்கத்திற்காகத் தான் இப்பொழுது அவர் பேசுகிறார். பற்றி எரிந்து கொண்டிருக்கிறது மணிப்பூர். ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குப் போக முடியவில்லை. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை கேட்காத கதறல் குரல்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு பிரதமர் எதைப் பற்றிப் பேச வேண்டும். ஒரு மாநிலத்தில் 60 நாட்களாக எரியும் நெருப்பை அணைக்க முடியவில்லை. அதைப் பற்றிப் பேச வேண்டிய பிரதமர் புதுசா நெருப்பு வைப்பது பற்றிப் பேசுகிறார்'' என்றார்.