பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாள் பயணமாக வரும் அக்டோபர் 30- ஆம் தேதி அன்று தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதால், காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 30- ஆம் தேதி அன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பசும்பொன் கிராமத்துக்கு சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என்றும், பின்னர் குருபூஜையில் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பா.ஜ.க. தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், தமிழக பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும் பிரதமர் கலந்து கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்தாண்டு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரை நினைவு கூர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.