மழை, வெள்ளம், காட்டுத்தீ என, ஆபத்துக்கள் பல குறுக்கிட்டாலும், உயிரிழப்புக்களே ஏற்பட்டாலும், பக்தி செலுத்துவதை ஒத்திவைக்க மாட்டார்கள் மக்கள். இன்று சதுரகிரி மலையிலும் அதுதான் நடந்திருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எதிர்பாராதவிதமாக, இன்று தீடீரென்று மழை பெய்தது. மழை பெய்துகொண்டிருக்கும்போது, மலை ஏறுவது மிகவும் ரிஸ்க் ஆனது என்பதால், பக்தர்களை இன்று அனுமதிக்கவில்லை. சித்தர்கள் வாழும் மலை என்ற நம்பிக்கை மேலோங்கியிருப்பதால், சுந்தரமகாலிங்கத்தை தரிசித்தே ஆகவேண்டும் என்பதில் பக்தர்கள் உறுதியாக இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகமோ, மக்களின் உயிர் விஷயத்தில் கோட்டைவிட்டு எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் கறாராக செயல்பட்டது. ஒருகட்டத்தில், பொறுமையிழந்த பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆனாலும், அனுமதி கிடைக்கவில்லை. அதனால், தரிசனம் கிடைக்கவில்லை என்ற மனச்சுமையுடன், தலைக்கு மேலாக கைகளை உயர்த்தி, சதுரகிரி மலையை நோக்கி கும்பிடு போட்டுவிட்டு, வீடுகளுக்குத் திரும்பினார்கள் பக்தர்கள்.
Published on 14/03/2018 | Edited on 14/03/2018