விருதுநகரில் பாதயாத்திரை நடத்திய அண்ணாமலை, “மாணிக்கம் தாகூருக்கு இங்கே எம்.பி. சீட் கிடைக்கப் போவதில்லை. விருதுநகர் தொகுதியில் போட்டியிட வைகோ, அவருடைய மகனுக்கு எம்.பி. சீட் கேட்கிறார். ரோட்டில் நடந்து செல்பவர்கள் எல்லாம் எம்.பி. சீட் கேட்கிறார்கள்'' என்று பேசியது முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
விருதுநகர் பாண்டியன் நகரில் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் அழைத்ததன் பேரில் சென்ற அண்ணாமலை, அங்கு டீ கடையில் டீ குடித்தார். அதற்கான தொகையை பேடிஎம்மில் செலுத்தினார். அப்போது, டீ கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் பெரிய அளவு ஃபோட்டோவை வைத்து, அதற்குக் கீழ், ‘தேநீர் கடையிலிருந்து ஆரம்பித்து இன்று தேசத்தின் பிரதமராகி இருக்கிறார் நரேந்திர மோடி’ என்ற வாசகத்தை எழுதி வைக்கவேண்டும். இந்த மாற்றம் உங்கள் டீ கடையிலிருந்து முதன் முதலாகத் தொடங்கட்டும்” என்று அந்த டீ கடைக்காரரிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் அண்ணாமலை பேசியபோது, “பின்தங்கிய மாவட்டமாக இருந்த விருதுநகர் மாவட்டத்தை 4 ஆண்டுகளில் முதன்மை மாவட்டமாக பிரதமர் மோடியின் அரசு மாற்றியிருக்கிறது. விருதுநகரில் குடிநீர் பிரச்சனை தீர செண்பகவல்லி அணைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு கொண்டு வந்த திட்டங்களைவிட மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் தான் அதிகம். விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதற்கு அமைச்சர்களே காரணம். அதற்காக அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களால் பாரத மாதா பட்டி தொட்டியெங்கும் சென்று சேர்ந்திருக்கிறார். மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. ஆனால், 400 சீட்டிலா? 360 சீட்டிலா? என்பதுதான் கேள்வி. தமிழ்நாடு 40 சீட் கொடுத்தால் 400 சீட்டுகளோடு பாராளுமன்றம் செல்வார். விருதுநகர் மண் பா.ஜ.க.வை வெற்றி பெறச் செய்யவேண்டும்” என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது அண்ணாமலை, “இது அண்ணாமலையின் யாத்திரை அல்ல. பா.ஜ.க.வின் யாத்திரை. இந்த யாத்திரையால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்று எதிர்க்கட்சியினர் பேசுவதே பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம், மாநில அரசு மத்திய அரசு எதிர்ப்பு மனோபாவத்தில் இருந்து எதையும் பார்ப்பதுதான். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு முழுமையாகச் செயல்படுத்துவதில்லை. பிரதமர் எதைப் பேச வேண்டுமோ அதைத்தான் பேசுவார். மணிப்பூர் பிரச்சனை உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அதனால்தான், அமித்ஷா பதிலளிக்கிறார். எல்லா விஷயத்திற்கும் பிரதமர் பதிலளிக்க வேண்டியதில்லை.” என்றார்.