கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை அருகே உள்ளது மைலோடி. இப்பகுதியில், 'மிக்கேல் அதிதூதர் ஆலயம்' ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பாதிரியாராக ராபின்சன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். அதே ஆலயத்தில் உறுப்பினராக சேவியர் குமார் என்பவர் இருந்து வந்தார். 45 வயதான சேவியர் குமார் மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவரான இவர், அரசு போக்குவரத்துகழக கன்னியாகுமரி பணிமனையில் மெக்கானிக்காகவும் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெமினி. 40 வயதான ஜெமினி, மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைசெய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சேவியர் குமார் ஆலயத்தின் கணக்கு வழக்குகளில் இருந்த குளறுபடிகளை ஆலயத்திற்கான 'வாட்ஸ்அப் குழு' மற்றும் சமூக வளைதளத்தில் பதிவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இது ஆலய நிர்வாகிகளை அதிருப்தி அடைய செய்து இருக்கிறது. தொடர்ந்து, சேவியர் குமார் ஆலய கணக்குகளின் குளறுபடிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வர, ஆலயத்தில் மற்றொரு உறுப்பினராக இருந்த எம். ஆர்.ரமேஷ் பாபுக்கும், சேவியர் குமாருக்கும் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. எம்.ஆர்.ரமேஷ் பாபு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், தக்கலை திமுக ஒன்றிய கழகச் செயலாளராக இருந்து வருகிறார். ஒருகட்டத்தில், எம்.ஆர்.ரமேஷ் பாபுக்கும், சேவியர் குமாருக்கு தகராறு முற்ற, எம்.ஆர்.ரமேஷ் பாபு தனது கட்சி செல்வாக்கை பயன்படுத்தி பால்வளத்துறை அமைச்சர் பரிந்துரையில், திங்கள்சந்தை பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த சேவியர் குமாரை கன்னியாகுமரி பணிமனைக்கு பணி மாற்றம் செய்தாக கூறப்படுகிறது.
மேலும், ஆலய செல்வாக்கை பயன்படுத்தி ஆலயத்திற்கு கீழ் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் சேவியர் குமாரின் மனைவி ஜெமினிக்கு மெமோ கொடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சேவியர் குமார் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், மீண்டும் பள்ளியில் பணியில் சேர்ப்பதாக நிர்வாகத்தினர் மனைவி ஜெமினியிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், இதையும் சேர்த்து சேவியர் குமார் வாட்ஸ்அப் குழுவில் தெரிவித்து அவதூறாக பதிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பேசுவதற்காக சேவியர் குமாரை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்திலுள்ள பங்குத்தந்தை இல்லத்திற்கு வருமாறு பங்குத்தந்தை ராபின்சன் அழைத்துள்ளார்.
இதையடுத்து, சந்திக்க வந்த சேவியர் குமாரிடம் ராபின்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்ற, சேவியர் குமாரை பங்குதந்தை ராபின்சன் மற்றும் அங்கிருந்தவர்கள் 'அயர்ன் பாக்ஸால்' அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கொலை செய்ததற்கான ஆதாரத்தை மறைக்கும் நோக்கில் அந்த கும்பல் கண்காணிப்பு கேமரா பதிவை எடுத்துக் கொண்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலயத்தில் குவிந்தனர். உடனே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் காவல் துறையினர் உடலை எடுக்க முற்பட்டனர். ஆனால், உடலை எடுக்க விடாமல் முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சேவியர் குமார் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சேவியர் குமார் கொலை தொடர்பாக மைலோடைச் சேர்ந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன், முரசங்கோடு பாதிரியார் பெனிட்டோ உள்ளிட்ட 15 பேர் மீது கொலை உட்பட 9 பிரிவுகளில் இரணியல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் போலீசாரிடம் உடலை ஒப்படைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய வின்சென்ட் மற்றும் ஜெஸ்டஸ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளியான பங்கு தந்தை மற்றும் திமுக பிரமுகரை தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து பங்குத்தந்தை ராபின்சன், ஆலயத்தில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ''கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், தக்கலை ஒன்றிய கழகச் செயலாளராக செயல்பட்டு வந்த எம். ஆர்.ரமேஷ் பாபு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட காரணத்தினால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கிப்பட்டார்'', என திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெளியிட்டார். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாதிரியார் கோர்ட்டில் சரணடைய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் கோர்ட்டுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்ட பாதிரியார் ராபின்சன் இன்று காலை திருச்செந்தூர் கோர்ட்டில் சரணடைந்தார்.