இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு, பின்பு நிலவுக்கு மிக அருகில் சென்று தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்று மாலை லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கிய நிலையில், நேற்று இரவு 9 மணியிலிருந்து லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சந்திரயான் - 3 திட்டத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றிய விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் வீட்டிற்கு சென்ற அமைச்சர் பொன்முடி அவர் தந்தையிடம் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி பேசுகையில், ''நீண்ட காலமாக தன்னுடைய ரயில்வே ஊழியர்களுக்கு குரல் கொடுப்பவர். ஒரு ரயில்வே தொழிலாளியாக இருந்து தன் மகன் இன்று உலக அளவில் சந்திரயான் மூன்றை நிலவில் இறக்கியதன் மூலமாக மிகப்பெரிய பேரை பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவருக்கு கிடைத்த பெயர் மட்டுமல்ல இது விழுப்புரம் நகரத்திற்கு கிடைத்திருக்கிற பெருமை. தமிழகத்திற்கு கிடைத்திருக்கிற பெருமை. அதனால் தான் தமிழக முதல்வர் இன்று அவரிடம் நேரடியாக தொலைபேசி மூலமாக பாராட்டி இருக்கிறார்.
வீரமுத்துவேல் தங்கையின் திருமணத்திற்கு கூட வரவில்லை. 23 ஆம் தேதி தான் நிலவில் இறங்குகிறது தங்கையின் திருமணத்திற்கு எல்லாம் வர முடியாது என்று சொல்லிவிட்டு கடமையே கண்ணாக பணியாற்றிய ஒரு வீரன். விழுப்புரத்தைச் சேர்ந்த அவருக்கு நாம் பல்வேறு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். அதற்கெல்லாம் அவரை வளர்த்து உருவாக்கியது அவரது தந்தை. எப்பொழுதும் ரயில்வே தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து கொண்டிருப்பவர். விழுப்புரம் நகரத்தின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். விழுப்புரத்திற்கு பெரிய பெயரை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் பழனிவேலும் அவருடைய புதல்வர் வீரமுத்துவேலும்'' என்றார்.