Skip to main content

தக்காளி விலை மீண்டும் கிடுகிடு உயர்வு

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

The price of tomatoes has risen sharply again

 

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக ஒரு கிலோ தக்காளி 120 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கூடுதலாகக் கொள்முதல் செய்து 62 பண்ணை பசுமை கடைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு  ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையைத் தொடங்கியது. இதன் மூலம் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.

 

இதையடுத்து கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்ததால் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தக்காளியின் மொத்த விற்பனை விலை சற்று குறைந்திருந்தது. இருப்பினும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தெலங்கானா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேட்டிற்கு தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

 

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று தக்காளி கிலோ ஒன்றுக்கு 110 ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஆயிரத்து 200 டன் தக்காளி தேவையுள்ள நிலையில், 400 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்ததால் மொத்த விற்பனையில் இன்று கிலோ 140 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தக்காளி நேற்றைய விலையில் இருந்து இன்றைக்கு 30 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ முதல் தர  தக்காளி 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்