இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2024) பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்களான சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி குடியரசுத் தலைவர் இல்லத்தில் நேற்று முன்தினம் (30.03.2024) நடைபெற்ற விழாவில் கர்பூரி தாக்கூர், சரண் சிங், நரசிம்மராவ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அத்வானியின் உடல் நலனை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (31.03.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு மற்றும் அத்வானியின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின்போது அத்வானி அருகில் பிரதமர் மோடி அமர்ந்திருப்பது போன்றும், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மட்டும் நிற்பது போன்று புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. இது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த விசிக தலைவர் திருமாவளவன், “பிரதமர், மேனாள் துணைப் பிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா?
தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா? இந்த அவமதிப்பு- இவர் பெண்மணி என்பதாலா? அல்லது இவர் பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்க வைத்து படம்பிடித்து வெளியிடுவது என்ன வகை பண்பாடு? பெரும் அதிர்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#பிரதமர், #மேனாள்_துணைபிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா?
தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட… pic.twitter.com/x5ccOz0lIi— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 31, 2024
இதேபோன்று திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், பாஜக ஆட்சியின் கீழ் எங்கள் குடியரசு தலைவர் மீது காட்டப்படும் அவமரியாதை வருத்தமளிக்கிறது. நமது தேசத்தின் அரசியலமைப்புத் தலைவரைக் கூட சாதி மற்றும் பாலினப் பாகுபாடு எவ்வாறு தொடர்கிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு அப்பட்டமான சான்றாக விளங்குகிறது” விமர்சித்துள்ளார்.
Deeply dismayed by the blatant disrespect shown towards our @RashtrapatiBhvn. This image serves as a stark evidence of how caste and gender discrimination persist, even towards the constitutional head of our nation, under BJP rule. pic.twitter.com/8jZVOrtZGg— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 1, 2024