கரூர் மாவட்டத்தில் 3 காவல் உட்கோட்டங்களில் 17 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. காவல் நிலையங்களில் குற்றத் தடுப்பு பணிக்காகவும், சாலை விபத்து, மனு விசாரணை, 100 அவசர உதவி தொலைபேசி எண்ணிற்கு அழைப்புக்கு செல்வது போன்ற சட்டம் ஒழுங்கு பணிகளுக்கு கடந்த ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் நகர உட்கோட்டத்தில் உள்ள கரூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எண் 1 ரோந்து வாகனமும், வெங்கமேடு, வாங்கல் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எண் 2 ரோந்து வாகனமும், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எண் 3 ரோந்து வாகனமும், வெள்ளியணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எண் 4 ரோந்து வாகனமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இதில் காவலர்கள் சுழற்சி முறையில் 24 பேர் பணியாற்ற உள்ளனர். இந்த ரோந்து வாகனங்களை திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் சரவண சுந்தர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர், நேற்று இரவு கரூர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து கண்ணாடிகள் உடைப்பு, பயணிகளை தாக்கிய கலவரத்தில் 8 திருநங்கைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது கூட 2 குற்றவாளிகளை கைது செய்து இருப்பதாகத் தெரிவித்தார்.