காவிரியில் தண்ணீர் பற்றாக்குறையால் கடைமடை பாசனப் பகுதியில் நட்ட பயிர்கள் கருகிக் கொண்டிருக்கிறது. கருகிய பயிரைக் கண்ட விவசாயி ராஜ்குமார் மரணமடைந்துள்ளார். தினம் தினம் வேதனையோடு வயல்களைப் பார்த்து தண்ணீர் எப்ப வரும் என்று கண்ணீர் வடித்து வருகிறார்கள் விவசாயிகள். அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுக்காதே என்று கர்நாடகாவில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் தண்ணீர் பெற்றுத்தா... என்று போராட்டங்கள் தொடங்கியுள்ளது. செவ்வாய்க் கிழமை தஞ்சை பூதலூரில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. புதன் கிழமை(இன்று) தஞ்சையில் தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் ராமநாதன் தலைமையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். இதில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, “1968 முதல் இந்த காவிரிப் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. ஆணி வேர் விவசாயிகள். அப்படியான விவசாயி ராஜ்குமார் கருகிய பயிரைக் கண்டு மரணமடைந்திருப்பது பெருந்துயரம். இனியும் ஒரு விவசாயி கூட இறக்கக் கூடாது. ராஜ்குமார் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும். சீசனுக்கு மட்டும் அரசியல் பேசிட்டு போகாமல் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிறோம். இங்கு ஆட்சிகள் தான் மாறுகிறது; காட்சிகள் மாறவில்லை. கர்நாடகா போனால் தமிழர்களை இறங்கி நடக்கச் சொல்கிறார்கள்.
விவசாயி வாழ்ந்தால் தான் நாடும் வாழும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். நமக்கெல்லாம் உணவளித்த விவசாய பூமி தற்போது டெல்டா பாலைவனமாகிறது. உணவளிக்கும் விவசாயிகளுக்காக ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று கேட்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் பெய்த மழைத் தண்ணீர் எங்கே? கனிமவளக் கொள்ளை, மணல் கொள்ளை, நீர்நிலை பராமரிப்பு இல்லை, தடுப்பணைகள் இல்லை அப்புறம் எப்படி தண்ணீர் இருக்கும். முதலில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். நாங்கள் ஆளுநரைப் பார்க்கப் போகிறோம். அடுத்த தேர்தலுக்கான அரசியலாகப் பார்க்காமல் அடுத்த தலைமுறைக்கான அரசியலாக முன்னெடுக்க வேண்டும். முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணம் தீர்வல்ல நிரந்தரத் தீர்வு காண வேண்டும். நானும் டெல்டாக்காரர் என்று சொல்லும் முதலமைச்சர் சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவிடம் பேசி நிரந்தர தீர்வு கண்டு டெல்டாக்காரர் என்பதை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். காவிரிப் பிரச்சனை தீர நதிநீர் இணைப்பு ஒன்றே சரியானது. இதனைப் பிரதமர் செய்ய வேண்டும்” என்றார். உண்ணாவிரதத்தில் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகளும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.