கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்காததால் சிறுமியும் அவரது அண்ணனும் அவரது பாட்டி வீட்டில் தங்கி ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளனர். ஆவினங்குடி அருகே உள்ளது தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது வாலிபர் வல்லரசு. இவருக்கும் அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 15.7.2021 ஆம் தேதி வல்லரசு அந்த சிறுமியை வீட்டை விட்டு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்படி சென்றவர்கள் ஒரு கோயிலில் வைத்து அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டு மீண்டும் அந்த சிறுமியின் பாட்டி வீட்டிற்கு வந்து இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தொளார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தவர்களுக்கு சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
சிறு வயது பெண் எப்படி கர்ப்பமானார் என்று சந்தேகம் சுகாதார துறையினருக்கு ஏற்பட்டதால் ஆவினங்குடி காவல்நிலையத்திற்கும், மாவட்ட சமூக நல அலுவலருக்கும் தகவல் அளித்துள்ளனர். அவர்களது தகவலின் பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் விசாரணை செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் கடந்த 27ஆம் தேதி வல்லரசுவிடமிருந்து அந்த சிறுமியை மீட்டு கடலூர் சிறுமிகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வல்லரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாக உள்ள இளைஞர் குறித்த தகவல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.