முன்பு திருமணம் என்றால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து மணமகளை கூட்டிக்கொண்டு மணமகள் வீட்டிற்கு செல்வார்கள். அங்கு மணமகள் தலைகுனிந்தவாறு தட்டில் காப்பியை கொண்டு வந்து மணமகன் மற்றும் உறவினர்களுக்கு தருவார். புகைபடத்தில் மட்டுமே பார்த்த மணமகளின் முகத்தை நேரில் காண வேண்டும் என்று மணமகன் ஏங்கித் தவிப்பான். ஆனால் அவளோ தலைகுனிந்த படியே வீட்டிற்குள் சென்று விடுவாள். இருவீட்டாரும் பேசி முடித்துவிட்டு புறப்பட்டு விடுவார்கள்.
பின்னர் மணமகன் தனது வாழ்கை துணைவியாக வரயிருப்பவளை எப்படியாவது கண்டுவிட வேண்டும் என்று, இரண்டுநாள்கள் கழித்து எதாவது ஒரு காரணத்தைக் கூறி மணமகள் வீட்டிற்கு செல்வான். ஆனால் அங்கு மாமனார் மட்டுமே பேசி முடித்து அவனை வீட்டிற்கு வழி அனுப்பி விட்டுவிடுவார். இதையடுத்து திருமணத்தில்தான் மணமகன், மணமகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வார்கள். இப்படிப்பட்ட பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் அன்று தான் மணமக்களை ஒன்றாக நின்று புகைப்படம் எடுக்க கூட குடும்பத்தினர் அனுமதிப்பார்கள்.
ஆனால் தற்போது அப்படி இல்லை. கலாச்சார மாற்றத்தால், நாகரிக மோகத்தால் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்ட பிறகு, திருமணத்தைப் பற்றி பெற்றோரிடம் தெரிவிக்கும் செய்திகளை எல்லாம் நம்மால் காண முடிகிறது. சிலர் சமூகவலைதளங்களிலேயே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறத்தான் செய்கின்றன. திருமணம் என்பது அவர் அவர் தனிப்பட்ட விருப்பம். பார்வையாளராக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, குறைகூறவோ நமக்கு உரிமை இல்லை.
இது ஒருபுறம் இருக்க திருமண ஜோடிகள், திருமணத்திற்கு முன்பு ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் போட்டோ சூட் மூலம் இணையத்தை கலக்கி வருகின்றனர். ஆற்றில் படகில் அமர்ந்தும், பூங்காக்களிலும் நடைபெற்று வந்த போட்டோ சூட் இப்போது ஒருபடி மேலே சென்று தண்ணீருக்கு அடியில் நடைபெற்று வருகிறது. இதற்காக திருமண ஜோடி லட்சக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவ, சிங்கள் பசங்க என்று கூறும் திருமணமாகத ஆண்கள், அந்த புகைப்படத்திற்கு கீழே கடுப்பேற்றாதீர்கள் என்று கமண்ட் செய்வது வேடிக்கையாக உள்ளது. ஒருபுறம் சிந்திக்கவும் வைக்கிறது.