கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே 336 மீட்டரில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்தது. அதில், “தற்போதுள்ள அணைக் கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆனதால் பாதுகாப்பு கருதி புதிய அணைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அணைக் கட்டிய பின்னர் தமிழகத்திற்கு தற்போது வழங்குவதைவிட அதிக தண்ணீரை வழங்க முடியும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த விண்ணப்பம் தொடர்பாக மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்தப் புதிய அணை வண்டிப்பெரியாரிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் முல்லைப் பெரியாரில் புதிய அணை, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுளார்.
அதாவது மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் கீழ் செயல்படும் புதிய அணைக் கட்டும் நிபுணர் குழுவின் தலைவருக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். அதில், “முல்லை பெரியாறு அணைக்கு அருகில் புதிய அணை தொடர்பாக கேரள அரசின் திட்ட அறிக்கையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். முல்லை பெரியாறில் புதிய அணைக் கட்ட அனுமதிக்கக் கூடாது. முல்லை பெரியாறு அணையை நம்பி மதுரை, தேனி திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட்ங்களைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளனர். எனவே கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணையைக் கட்டினால் சுமார் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். சுமார் 2 கோடி தமிழக மக்கள் குடிநீர் ஆதாரத்தை இழக்க நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.