திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களா மேடு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய பெய்த கனமழையின் காரணமாக தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருந்துள்ளது. அடுத்த முறை வேகமாக காற்று அடித்தால் இந்த மின்கம்பம் கீழே விழும் நிலையில் இருக்கிறது என அப்பகுதி மக்கள் மின்வாரியத்துக்கு தகவல் கூறியுள்ளனர்.
அதனை நேரில் வந்து பார்த்த நாட்றாம்பள்ளி மின்வாரிய அதிகாரிகள், மாத்தி நடுவதற்கு மின்கம்பம் இல்லை எனச் சொல்லி நீண்ட கயிறு கொண்டுவந்து கம்பத்தின் உச்சியில் கட்டி கம்பம் கீழே விழாமல் இருப்பதற்காக அந்த கயிறை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள உலோக தடுப்பானில் கட்டியுள்ளனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மழைக்காலம் தொடங்கியுள்ளது. மழைநீர் மின்கம்பம் அதில் கட்டப்பட்டுள்ள கயிறில் பட்டு சாலையோரம் உள்ள தடுப்பான் வரை மின்சாரம் பாயும் நிலை ஏற்படும். இது தெரிந்தும் இப்படி செய்த மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுவரை எந்த வித அசம்பாதவிதமும் ஏற்படவில்லை, ஒரு அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் இதனை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.