தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 7.30 முதல் பல இடங்களில் விட்டுவிட்டும், சில இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு நிலவியதாலும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திவந்த நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைப்பட்டதே இந்த மின்வெட்டிற்கான காரணம் என்றும் அதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்தார்.
இந்த நிலையில், நேற்று இரவும் திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.